Wednesday, January 07, 2015

கற்றால்தான் மேன்மை


கற்காமல் மனிதகுல மேன்மையென்ப தில்லை;
   கற்றவர்கள் வழிநடத்த வாழ்வதுதான் உயர்வு;
கற்குமாவல் உள்ளோர்க்கு வழிகாட்டி விடுவோம்;
   கற்குமாவல் பெருக்கெடுக்கும் செயல்திட்டம் காண்போம்;
கற்பதெனின் எண்ணெழுத்தைப் படித்தெழுதி முடித்து
   கணக்கற்ற ஆய்வுசெய்யும் கருத்துநிலை செல்லல்;
கற்றவற்றைப் படைப்பாக்கி திரட்சியினைக் காண்போம்;
   கற்றபடி நின்றிடுவோம் புதுவாழ்வு பிறக்கும்.

சுமதிசுடர்

தேடலால் துறைகண்டோம்


உறவுகாக்கும் தேடல்தான் அரசியலாய் ஆச்சு;
   உழைப்புகாக்கும் தேடல்தான் பொருளியலாய் ஆச்சு;
உடல்காக்கும் தேடல்தான் மருத்துவமாய் ஆச்சு;
   ஒழுங்கியக்க தேடல்தான் அறிவியலாய் ஆச்சு;
சுவடிகாக்கும் தேடல்தான் வலையியலாய் ஆச்சு;
   தொகுத்தவற்றுள் தேடல்தான் ஒப்பியலாய் ஆச்சு;
அறம்காக்கும் உயர்வான வாழ்வியலைத் தேடு;
   அதன்விளைவாய் அமைதியான உலகவாழ்வைக் காண்போம்.

சுமதிசுடர்

சான்றுகளைத்தேடு


உறங்காமல் தேடவேயிவ் வுயர்வான வாழ்வு;
   ஒருசிலரே விடைகண்டு வழிகாட்டி யானார்;
புறம்தேடி பொருள்பற்றி பெரும்பாலோர் வாழ்வர்;
   அகம்தேடி அருள்வழியில் சிறுபாலோர் வாழ்வர்;
அறமற்ற வணிகநோக்குப் பொருள்தேடும் வாழ்வில்
   அடுக்கடுக்காய் மனிதகுல சிக்கல்கள் பெருக்கம்;
சிறப்பான வாழ்வியலைத் தொலைத்துவிட்டோம் உலகீர்;
   சீர்மையொடு மீட்டெடுப்போம் சான்றெல்லாம் தேடி.

சுமதிசுடர்

Tuesday, January 06, 2015

கல்விபெறு


கல்விபெறு அன்பே கல்விபெறு
   காலத்தால் அழியாத கல்விபெறு
சொல்லிய கருத்தெல்லாம் உனதாகி
   சுடர்விட அன்பே கல்விபெறு
கல்விபெறு மொழிக் கல்விபெறு
   கருத்தினைப் பகிர்ந்திட கல்விபெறு
கல்லியே புதையலைக் கைக்கொள்ள
   கவின்மிகு தாய்மொழிக் கல்விபெறு
பொருள்பெருக்க தொழில் கல்விபெறு
   பொறியினை யாள கல்விபெறு
பொருள்வனப்பு,தரம்,மதிப்பு மூன்றுயர்த்த
   புதியன படைக்கும் கல்விபெறு.

சுமதிசுடர்

எப்பொழுதும் கல்


இளமையில் கல்
இல்லறத்தில் கல்
தொண்டில் கல்
துறவறத்தில் கல்
வீட்டில் கல்
பள்ளியில் கல்
தொழிலகத்தில் கல்
குழுக்களில் கல்
மனமறியக் கல்
மனமடங்கக் கல்

சுமதிசுடர் 

Sunday, January 04, 2015

வளம் பகிர்வோம்


வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே!
  வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ?
வளம்கொள்ள எல்லையேது? வரன்முறைகள் காண்போம்;
  வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து;
வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள்
  வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்;
எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்;
  எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம்.

சுமதிசுடர் 

வளம்பறிக்கும் நிலை


வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான்
  வறியவர்கள் பெருகிவர காரணமும் இவர்தான்
உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால்
  உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம்
உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும்
  உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான்
வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை
  வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு

சுமதிசுடர்