Tuesday, December 12, 2006

பறவையிடம் பாடம்

வாழ்க வளமுடன்

பறவையிடம் பாடம்

இடம்மாறி வலம்வந்து உலகவீட்டில் வாழும்
-இதமான வெப்பநிலை இருக்குமிடம் வீடு
கடல்கடந்தும் இனம்பெருக்க ஏற்றயிடம் செல்லும்
-கலைக்கோலம் போட்டபடி கூட்டமாகப் போகும்
அடைகாக்கும் ஓரினம் அதற்குதவும் துணையும்
-அலைக்கழித்து விழித்தாலும் துணைமாறாத் தூய்மை
திடமாக இல்வாழ்வு நெறிஏற்றால் நமக்கு
-சிறப்பான ஓருலகப் பேரரசு கிட்டும்.

சுமதிசுடர்

ஐந்தறிவு சாட்சி

வாழ்க வளமுடன்

ஐந்தறிவு சாட்சி

பறவைகளும் விலங்குகளும் தன்னினத்தைப் பேணும்
-பாங்குகளைப் பலமுறைப்பார்த் துப்பார்த்து மகிழ்ந்தேன்.
பிறயினத்திற்(கு) உணவாகும், எதிரியாகும், இருந்தும்
-பிறப்பளித்துப் பயிற்றுவித்து மகிழ்ந்தொன்றி வாழும்
சிறகுமுற்றா குஞ்சுக்கு செரிக்கவைத்த உணவு,
-சீரழிக்கும் மற்றினத்தார் இடமிருந்து காப்பு,
மறக்கவொண்ணா இசையெழுப்பி அழகுகாட்டித் திரியும்
-மக்களெல்லாம் தனையுணர ஐந்தறிவு சாட்சி.

சுமதிசுடர்

வாழ்த்து (Blessings)

வாழ்க வளமுடன்

வாழ்த்து

சந்தித்த மக்களெல்லாம் பல்லாண்டு வாழ்க.
-சான்றாண்மை பயணத்தில் சூழ்நிலைகள் தந்தீர்
வந்தழைத்தீர் போட்டிக்கு வாய்ப்பளித்தேன் உமக்கே
-வரவுபல, கூட்டிணைப்பு பொறுப்பிற்குள் வாழ்வு
கொந்தளித்தீர் கூடிவாழும் சிறப்பறியா நிலையால்
-குறைநிறையில் திட்டங்கள், கற்றறியும் வாய்ப்பே
சிந்தித்து மேன்மைபெற சிக்கல்கள் தந்தீர்
-சிறப்பான வாழ்வளித்தீர் நீடூடீ வாழ்க.

சுமதிசுடர்

நூலகம் காண் (Library)

வாழ்க வளமுடன்

நூலகம் காண்

பாடதிட்ட எல்லைமீறிக் கற்கவேண்டும் குழந்தாய்!
-பலகால மனிதவாழ்வின் பெற்றியெல்லாம் உனக்கே;
நாடியன்றோ பெருக்கவேண்டும் நாம் ஏற்கும் அறிவை
-நல்லுலகம் வேண்டியன்றோ நாட்டிவைத்தார் எழுத்தில்.
வேடிக்கை விளையாட்டாய் நீகல்வி ஏற்று
-விரிந்தாய்ந்து வியனுலக சிறப்புகண்டு மகிழ்க.
தேடிப்பார்! துணை நிற்கும் திரு நூலைக் காண்பாய்
-தேக்கிவைத்து நூலகம் காண்! தெளியு(ம்)வரைப் பயனாம்.

சுமதிசுடர்

தெய்வீகப் பயணம்(Divinely Life)

வாழ்க வளமுடன்

தெய்வீகப் பயணம்

வாழ்க்கையொரு தெய்வீகப் பயணமென்ப(து) உண்மை
-மாக்களெல்லாம் மக்களாக வாழ்ந்தவர்கள் சாட்சி
நோக்காடும் குழப்பமும்தான் பதிவுகளின் நியதி
-நொடியாமல் முன்னேற நிதம்வேண்டும் முயற்சி
சாக்காடு வருவதற்குள் தன்மனத்தை ஆய்ந்து
-தலைமுறையின் தீப்பதிவை சற்றேனும் குறைக்க
வேக்காடாம் துன்பத்துள் வாய்ப்புபெற்றோர் நாமே.
-விழிப்புடனே விளைவறிந்து செயலாற்றின் உயர்வே.

சுமதிசுடர்

கல்வியின் கருப்பொருள்(Education)

வாழ்க வளமுடன்

கல்வியின் கருப்பொருள்

கற்றவர்கள், பொறுப்பேற்றோர் சரணடைய வேண்டும்.
-காசுபணப் போட்டிவிட்டு கரையேற வேண்டும்.
பிற்போக்கை, வீண்பகட்டைப் புறமொதுக்க வேண்டும்.
-பிணி நீக்கி, எளியோரைப் பேணிடவும் வேண்டும்.
விற்காமல், வீண்செயாமல் விரிந்தறிய வேண்டும்.
-விளைவறிந்து செயலாற்றி விளக்கிவிட வேண்டும்.
கற்றபின்னும் குறுகி நிற்கும் நிலைமாற வேண்டும்.
-கல்வியெனும் செல்வத்தின் கருப்பொருளே இதுதான்.

சுமதிசுடர்

நமது கடமை (Our Duty)

வாழ்க வளமுடன்

நமது கடமை

தன்னைத்தான் அறிந்துகொண்டு தரமுயர்ந்து நிற்போம்.
-தகுதியுளோர் தொடர்புகொண்டு சான்றாண்மை பெறுவோம்.
அன்புவேண்டி அலைவோரை ஆதரித்து வாழ்வோம்.
-அவர் உயர நல்வழியில் நடந்துகாட்டி மகிழ்வோம்.
இன்பமுடன் இல்லறத்தில் பலபேறு பெறுவோம்.
-இவ்வழிதான் உலகமெல்லாம் அமைதிபெறும் வழியாம்.
நன்மைசெய்வோம் நாள்தோறும் நமதுபணி இதுவே.
-நானிலத்தில் சமாதானம் தழைத்தோங்கும் எளிதாய்.

சுமதிசுடர்