Sunday, November 19, 2006

உடல், உயிர், மனம் (Body, Life, Mind)

வாழ்க வளமுடன்

உடல், உயிர், மனம்

வேதிவினை பல நடக்கும் விந்தையான கூடு
-வினைநடத்தும் உருவமற்ற விரைவான ஆற்றல்
ஆதிவேதி தொடர்பறிய மனமென்னும் காந்தம்
-ஆழ்ந்தொன்றி அமைதிபெற அரியதொரு வாய்ப்பு
பாதிவரை பகுத்தறியும் வாய்ப்பின்றி தவித்தோம்
-பண்பட்ட குருவருளால் ஒருவாறு உணர்ந்தோம்.
மீதியின்றி உணர்ந்தறியும் நாள்காண்போம் வாரீர்!
-மிடுக்குடனே தொண்டாற்றி இறைசாட்சி ஆவோம்.

சுமதிசுடர்

வளமான வாழ்வு (VaLamaana vaazhvu)

வாழ்க வளமுடன்

வளமான வாழ்வு

இருவயது நிறைந்தவுடன் மூத்தோரின் பொறுப்பில்
-இடைவிடாத பயிற்சிகளால் தேர்ச்சிபெறும் வாழ்வு.
இருபதுக்கும் மேல்கல்வி தொழில்(இ)ணைந்த பயணம்.
-இல்லாமை தனைப்போக்க பொருள்பெருக்கும் உழைப்பு.
விரும்புதுணை கைப்பற்றி இல்லறத்தில் தொண்டு.
-விரிந்தகன்று மேன்மைபெற மனவளஞ்செய் பயிற்சி
பொருள் அறிந்த ஐம்பதுக்கும் மேல்மூத்தோர் ஆசான்
-பொருள்விடுத்த அறிவாற்றல் அடிப்படையில் வாழ்வு.

சுமதிசுடர்

தனிமை (ThaNimai)

வாழ்க வளமுடன்

தனிமை

தனித்திருத்தல் தனிமையில்லை தவவாழ்வால் நலமே
-தனக்குள்ளே போரிட்டு வெற்றிகண்டு வாழ்க.
இனிமையான குடும்பவாழ்வில் பற்றுடன் நற் பாடம்
-இன்பதுன்ப அனுபவத்தை எழுத்தாகக் காண்க.
தனித்தன்மை நமக்குண்டு அகம்நோக்கி அறிக.
-தன்னாய்வில் ஈடுபட்டு தற்சார்பு பெறுக.
கனிந்துவரும் பொதுநோக்கு புத்துலக வாழ்வு
-காலமெல்லாம் கருத்தாக உயர் நெறியில் செல்க.

சுமதிசுடர்

Wednesday, November 15, 2006

வாழ்க்கைத்துணை ( Life Partner )

வாழ்க வளமுடன்

வாழ்க்கைத்துணை

அவதூறு சொல்லாமல் அன்புகடன் செய்ய
-ஆதரவைப் பெற்றுய்யும் உடன்வாழும் இறையும்.
தவரெனினும் இடைவேளை விட்டபின்பு சுட்ட
-தக்கபடி தானுணர வாய்ப்பென்ற மகிழ்ச்சி
தவமாற்றி தற்சோதனை செய்தபின்னே மாற்றம்
-தலைதூக்கி நம்வாழ்வில் படிபடியாய் ஏற்றம்
அவரவராய் அறிந்(து)ஆழ்ந்து மாறுதலே சிறப்பு
-அருகிருந்து தொண்டாற்றி ஓருயிராய் வாழ்வோம்.

சுமதிசுடர்

குறிப்பெழுதுதல் ( Notes taking )

வாழ்க வளமுடன்

குறிப்பெழுதுதல்

ஊறிவரும் கருத்துகளை எழுத்தில் வைக்க
-உணர்ச்சிவேகம் குறைந்(து)உள்ளம் அமைதி யாகும்.
மாறிமாறி குறைசாற்றிக் கண்ட(து) என்ன?
-மன(து)அறிய தவறவிட்டால் விவேகம் வீணே.
ஏறியபின் வாழ்வியலில் நம்மைத் தேட
-எழுதிவைத்த ஏடுகளில் இருக்கக் காண்போம்.
தேறிவிட்டோம் வேறுபாடு குறைந்து (இ)ருந்தால்
-தெய்வவழி காட்டிநிற்கும் பொறுப்பைக் கொள்வோம்.

சுமதிசுடர்

நட்புறவு ( Friendship )

வாழ்க வளமுடன்

நட்புறவு

ஈருயிரின் இணைப்பினிலே அமைதி காண
-எத்தனையோ வழிமுறைகள் எழுத்தில் கண்டார்
ஓருயிரின் உணர்வுதேவை விருப்பம் எல்லாம்
-உணர நம்மை உட்கடந்து செல்ல வேண்டும்
சீருயிரின் ஆதார அறிவில் ஒன்ற
-சிந்தனையில் எண்ண ஊற்றாய் மலரும் அன்பு
பாருயர்த்தும் வழியிதனை பழகி வாழ்ந்து
-பண்பட்ட நட்புறவில் மகிழ்ச்சி காண்போம்.

சுமதிசுடர்

Monday, November 13, 2006

பெண்ணின விடுதலை ( Women freedom )

வாழ்க வளமுடன்

பெண்ணின விடுதலை

வீட்டுக்குள் தினம்சமையல், தன்குழந்தை வளர்ப்பு,
-விருந்தோம்பல், தொலைக்காட்சி பொழுதுபோக்கு, ஊரார்
காட்சிக்கு விழாவெடுத்தல், சாதிமத சடங்கு,
-சொத்து நகை சிகை பேணல், ஊர்வம்பு பேசல்,
காட்சிதரும் பொம்மையென காலமெல்லாம் வாழ்வு,
-கருவியென பால்வேட்பில் இருக்கு(ம்)நிலை ஒழித்து
கூட்டுக்குள் இறையுணர்ந்து கூடிவாழ்ந்து மகிழ்ந்து
-குறைதீர்க்கும் தொண்டாற்றும் குணக்குன்றாய் வாழ்க.

சுமதிசுடர்

துணை(ThuNai)

வாழ்க வளமுடன்

துணை

நினைத்ததும் என் நெஞ்சிற்குள் நிறைந்திருக்கும் அன்பே!
-நிலைமாறும் வாழ்வினிலே நிலைத்தயிடம் தருவாய்
தனையறியும் தவிப்புடனே உனைச்சேர்ந்த(து) அறிவாய்
-தனித்திருக்க சேர்ந்திருக்க தவவழியைத் தந்தாய்
எனை உன்னுள் வைத்திருந்து உயர்வாழ்வைத் தந்தாய்
-எண்ணத்தில் உயர்வளித்து சொல்செயல்சீர் செய்தாய்
அனைத்திற்கும் மேலாய் என் அன்பூற்றைத் திறந்தாய்
-அருட்துணையோ(டு) அறஞ்செய்து நின்புகழைக் காப்பேன்.

சுமதிசுடர்

திருமண வாழ்த்து(Thirumana Vaazhththu)


வாழ்க வளமுடன்

திருமண வாழ்த்து

இருகுடும்ப இணைப்பிற்கு பாலமாய் ஓர் குடும்பம்
-இன்றிலிருந்து உமதுகையில் புகழ்பரப்பும் பொறுப்பு
வருமானம், சேமிப்பு, செலவுவகை கண்டு,
-வரும்போகும் விருந்தினரை உபசரித்து மகிழ்ந்து,
விருதுபெற்று, கல்வியினால் சமுதாயம் காத்து,
-வியன் உலகை வலம்வந்து குழந்தைசெல்வம் உயர்த்தி,
அருட்துணையால் அகவாழ்வில் மேன்மைகண்டு நீங்கள்
-அறவாழ்வில் சிறந்தோங்க மனம்குளிர்ந்த வாழ்த்து.

சுமதிசுடர்

Thursday, November 09, 2006

கல்வி (Kalvi)

வாழ்க வளமுடன்

கல்வி

பொருள்வடிவு மாற்றுகின்ற கல்விகற்று செய்து
-பொருள்படைத்து பரிமாறி வாழ்க்கைவளம் காண்போம்
கருத்தொன்றா கல்வி நம்மை கடைநிலைக்குத் தள்ளும்
-கவலையற்று தொழில்முனைப்பில் மனமேன்மை காண்க
உருச்சிறப்பாம் நுண்ணறிவு, உள்ளுணர்வு மற்றும்
-உயிருணர்வு கலந்தமைந்த கல்விகற்று நின்று
திருத்தங்கள் பலகண்டு வாழ்வைச்சீர் செய்து
-சிறப்பான உலகிற்கு வழிகாட்டி ஆவோம்.

சுமதிசுடர்

மனிதவாழ்வு ( Human life )

வாழ்க வளமுடன்


மனிதவாழ்வு


தற்சுழற்சி மண்ணுருண்டை இந்தபூமி; அதற்குள்
- தனிச்சிறப்பாய் பரிணமித்து தனையறிய முயலும்
சிற்றியக்க மண்ணுருண்டை உடல்வடிவம் மனிதன்
- சிறுசெல்லின் தனிமங்கள் ஆண்டாண்டாய் சுழலும்
நெற்றிக்குப் பின்னமைந்து உடல் நடத்தும் மூளை;
- நெறியோடு(இவ்) அமைப்பியங்க நிலைகளன்பால் சுரப்பி;
உற்றறியும் மனம்கருவி; இணைப்பாற்றல் உயிராம்.
- உயிர் உணர, மனம் உயர அறிவறிதல் வாழ்வு.


சுமதிசுடர்

வழிகாட்டி ( Vazhikaatti)

வாழ்க வளமுடன்

வழிகாட்டி

வழிகாட்டி வாழ்வழித்து நிறைவோடு வாழும்
வலுவான எண்ணம் என் உள்ளத்தில் ஊற
வழிகாணத் துடிப்போரைச் சந்தித்து பேசும்
வாய்ப்பிலெல்லாம் உளம்திறந்து வெளிப்படுத்தி மகிழ்ந்தேன்
வழியறிந்து கலைதந்த குருவழியைப் பற்றி
வருவோரை வழி நடத்தி அருள்வாழ்வு வாழ்வேன்
வழி எளிதே! பின்பற்றி பயணிக்க அறிவீர்!
மானுடத்தின் வழியாக இறை நிலையின் கூத்தை.

சுமதிசுடர்

Tuesday, November 07, 2006

Seyal Vadivam

வாழ்க வளமுடன்

செயல்வடிவம்

செயலாற்றப் பிறந்துள்ளோம் வெளிப்படுத்தி மகிழ்வோம்
செயல் ஒழுங்கால் தன்னைச்சீர் செய்துப்புதுப் பிப்போம்
செயல்முடிக்க உடனிருப்போர்க்(கு) உதவிசெய்து உயர்வோம்
செயல்பாட்டால் கற்பிப்போம் சிறப்பான கல்வி
செயல்தம்மை உழைப்பாக்கி பகிர்ந்துண்டு வாழ்வோம்
செயல்விளைவை சிறப்பாக்கி அர்ப்பண்ித்து வாழ்வோம்
செயல்முடித்து சென்றபின்னும் பதிவுகளில் வாழ்வோம்
செயலுக்குள் பயணமாகும் நானென்னும் இயற்கை.

சுமதிசுடர்

Thursday, November 02, 2006

Vaayppu